சோம்பேறி விவசாயி – தமிழ் சிறுகதைகள்

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் சோம்பேறி விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். மற்றவர்கள் தங்களுடைய நிலத்தில் விவசாயம் செய்யும் போது அவன் மட்டும் வீட்டில் சோம்பேறியாக படுத்து தூங்கிக் கொண்டிருப்பான். 

இதை கவனித்த அவனுடைய மனைவி, “ஏங்க! எப்போதும் சோம்பேறித்தனமாக தூங்கி கிட்டு இருக்கீங்க! விவசாயம் செய்து உழைத்தால் தான் நாம் சாப்பிட முடியும். இல்லைனா நம் குடும்பம் வறுமையில் வாடும்.” என கண்டித்தாள். 

மனைவி பேச்சை காதில் வாங்காமல் மீண்டும் தூங்குவதிலே காரியமாய் இருந்தான். அப்படி ஒரு நாள் மனைவி கண்டிக்கவே சோம்பேறி விவசாயி வீட்டை விட்டு வெளியேறினான்.

விவசாயி போகும் வழியில், “எதற்காக உழைக்க வேண்டும்? வீட்டில் படுத்து தூங்கினால் இவ்வளவு என்ன? அந்த மாட்டை பார். நாள் முழுதும் புல்லைத் தின்று ஓய்வு எடுக்கிறது. நான் ஒரு மாடாக பிறந்திருக்கலாம்.” என்று சொல்லிக்கொண்டான். 

அந்த வழியில் வந்த முதியவர், விவசாயி சொன்னதைக் கேட்டார். பின்பு அந்த முதியவர் விவசாயிடம் “உனக்கு மாடாக மாற விருப்பமா?” என்று கேட்டார். அதற்கு விவசாயி, “மனிதன் எப்படி மாடாக முடியும்?” என்று கேட்டான். 

“இந்த முகமூடியைப் போட்டுக் கொண்டால் நீ மாடாக மாறலாம். ஆனால் சோளக் கதிரை மட்டும் சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் நீ இறந்து விடுவாய்” என்று முதியவர் சொன்னார். விவசாயி கொடுத்த முகமூடியை தன் முகத்தில் மாட்டினான். அடுத்த நிமிடமே விவசாயி ஒரு மாடாக மாறினான்.

உடனே முதியவர் அந்த மாட்டை கயிற்றில் கட்டி பிடித்து சென்றார். பின்பு அந்த மாட்டை மற்றொரு விவசாயிடம் 100 காசுக்கு விற்றார். 

Read Also : சொர்க்கத்தில் நரி

அந்த விவசாயி மாட்டை தன் வயலில் அதிக வேலைகளுக்கு பயன்படுத்தினான். நாள் முழுவதும் வயலில் வேலை பார்த்த மாடு அதிக களைப்பு அடைந்தது.

சில நாட்களில் மிகவும் சோர்வடைந்த மாடு, “தவறு செய்து விட்டேன். நான் ஒரு முட்டாள்!. மனைவியின் பேச்சைக் கேட்டு விவசாயம் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? இனிமேல் இங்கே இருக்கப்போவதில்லை. சோளக் கதிரை சாப்பிட்டு சாகப்போகிறேன்.” என்று சொன்னவாறு சோளக் கதிரை சாப்பிட்டது. 

சாப்பிட்ட அடுத்த நிமிடமே, மாடு விவசாயியாக மாறியது. சந்தோசத்தில் துள்ளி குதித்த விவசாயி, “என்ன அதிசயம் நான் மனிதனாக மாறி விட்டேன். இனிமேல் சோம்பேறியாக இருக்க மாட்டேன், உழைத்து வாழ்வேன்” என்று சொன்னவாறு வீட்டை நோக்கி சென்றான்.

கதையின் நீதி:

இந்தக் கதையின் நீதி என்னவென்றால், “சோம்பேறியாக இருக்கக்கூடாது. உழைத்து வாழ்வதே சிறந்தது”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *