வங்கியில் கடன் வாங்கியவரா நீங்கள் ? மத்திய அரசின் புதிய சலுகை அறிவிப்பு

மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு அறிவித்தது. இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக தனிப்பட்ட மற்றும் சிறு வணிக கடன் காலத்தை ஆறு மாத காலத்திற்கு ஒத்திவைக்கும் திட்டத்தை அறிவித்தது.

இந்த நேரத்தில் வங்கிகள் கடன் தொகைக்கு வட்டிக்கு வட்டி போட்டு கடன் சுமையை அதிகரித்தன. இந்த வட்டி முறையை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை பற்றி கீழே பார்க்கலாம்.

வட்டிக்கு வட்டி தடை

மத்திய அரசின் புதிய அறிவிப்பின் படி, வங்கிகள் மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை உள்ள காலகட்டத்தில் கடன் தொகைக்கு, சாதாரண வட்டி முறையில் கணக்கிட வேண்டும். மேலும் வட்டிக்கு வட்டி, அதாவது கூட்டு வட்டி முறையில் வங்கிகள் வசூலிக்க வேண்டாம் என மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதனால் ஆறு மாத ஒத்திவைப்புத் திட்டத்தைத் தேர்வு செய்தவர்களுக்கு சாதாரண வட்டியே கணக்கிடப்படும். கூட்டு வட்டி முறை தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதில் ஆறு மாத ஒத்திவைப்புத் திட்டத்தைத் தேர்வு செய்யாதவர்களுக்கு சரியான தேதிகளில் தவணை செலுத்தியதால் சாதாரண வட்டியே வசூலிக்கப்பட்டு இருக்கும். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கூட்டு வட்டி மற்றும் சாதாரண வட்டிக்கு இடைப்பட்ட தொகையை அவர்களது கணக்கில் ஊக்கத்தொகையாக வங்கிகள் செலுத்தும்.

யாருக்கு பொருந்தும்

இந்த புதிய மத்திய அரசின் சலுகை, 2 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ள வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்வி கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், நுகர்வு கடன் ஆகிய கடன்களுக்கு பொருந்தும்.

மேலும் இந்த சலுகை வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள், வீட்டு நிதி நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கிகள், தேசிய வீட்டு வசதி வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்களுக்கு பொருந்தும்.

இந்த வட்டிக்கு வட்டி முறை தள்ளுபடியால், கடன் வாங்கிய 75 சதவீத நபர்கள் பயன் அடைவார்கள் என்றும், மத்திய அரசுக்கு 7,500 கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதாரண வட்டியை கணக்கிட்டு அமல்படுத்தவும், சரியான தவணை தொகை செலுத்தியவர்களுக்கு ஊக்க தொகையை கணக்கில் வரவு வைக்கவும் வங்கிகளுக்கு நவம்பர் 5-ம் தேதியை இறுதி தேதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் வீட்டுக் கடன் பெற்றவரை காட்டிலும், வணிக கடன், நகை கடன் மற்றும் வட்டி அதிகம் உள்ள கடன் பெற்றவர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறந்த பயன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *