வாகனங்களில் Low beam மற்றும் High beam லைட்டை எப்போது பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா ?

நாம் அன்றாட வாழ்வில் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், ஒளி அமைப்பு (lighting system) மிகவும் முக்கியமானது. இந்த மின் விளக்குகள் வாகனத்தின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் மற்றும் பக்கவாட்டு பகுதியிலும் இருக்கும்.

இதில் குறிப்பாக முன் புறத்தில் உள்ள மின் விளக்குகள், மற்ற விளக்குகளைக் காட்டிலும் ஓட்டுனருக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இந்த முன்புற விளக்குகளில் Low beam மற்றும் High beam என இரண்டு விதமான வசதிகளை வாகன தயாரிப்பாளர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

எனவே இந்த Low beam மற்றும் High beam வசதியை எந்த சமயத்தில் பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் காணலாம்.

முகப்பு மின் விளக்குகள்

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முன்பகுதியில் உள்ள மின் விளக்குகள், முகப்பு விளக்குகள் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் Head lamp என்று சொல்லப்படுகிறது.

மிகவும் முக்கியமான இந்த முகப்பு விளக்குகள், இரவு நேரங்களில் ஓட்டுனருக்கு தெளிவான பார்வையையும், மற்ற வாகன ஓட்டுனருக்கு வாகனத்தின் இருப்பையும் மற்றும் செல்லும் திசையையும் தெளிவாக காட்ட உதவுகிறது.

எனவே ஓட்டுநர்கள் இந்த முகப்பு விளக்கின் உதவியுடன், பார்வை குறைபாடு மற்றும் மனித தவறினால் ஏற்படுவதை விபத்தை தவிர்க்க முடிகிறது.

ஆரம்ப காலங்களில் வாகனத்தில் கெரோசின் மற்றும் எண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன்பின்பு எலக்ட்ரிக் மின் விளக்குகள், Halogen மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது அதிக திறனுள்ள LED மின் விளக்குகளை வாகன தயாரிப்பாளர்கள் முகப்பு விளக்குகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த முகப்பு விளக்கில் உருவாகும் பிரகாசத்தை பொறுத்தும், ஒளி செல்லும் திசையை பொறுத்தும், Low beam மற்றும் High beam என இரண்டு வசதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளை பயன்படுத்தும் சரியான சமயத்தை கீழே காணலாம்.

Low beam

இந்த Low beam வசதியில், முகப்பு விளக்கில் ஒளியானது குறைவான பிரகாசத்துடன் கீழ்த்திசை நோக்கி செல்லும். இதனை passing beam அல்லது meeting beam என ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

இந்த Low beam வசதியை கண்டிப்பாக நெருக்கமான நகர சாலைகளில் வாகனத்தை ஓட்டும்போது பயன்படுத்த வேண்டும். இந்த Low beam-ல் கிடைக்கும் குறைவான பிரகாசம் மற்றும் கீழ் நோக்கி செல்லும் ஒளியானது, எதிரில் வரும் வாகன ஓட்டுனருக்கு அதிக வெளிச்சத்தால் ஒரு சில நொடிகளில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை தவிர்க்க உதவுகிறது.

சிக்னலில் நிற்கும்போதும், வாகன நெரிசலின் போதும் Low beam வசதியை பயன்படுத்துவது நல்லது. இந்த Low beam வசதியை பகல் நேரங்களிலும், தூசி நிறைந்த சாலைகளில் பயணிக்கும் போதும் பயன்படுத்தலாம்.

இந்த low beam வசதி, குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துவதால், வாகனத்தின் பேட்டரியின் செயல் திறன் அதிகரிக்கிறது மற்றும் மின் சக்தி சேமிக்கப்படுகிறது.

High Beam

இந்த high beam வசதியில், முகப்பு விளக்கில் ஒளியானது அதிக பிரகாசத்துடன் நேர் திசையை நோக்கி செல்லும். இதனை full beam அல்லது main beam என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

இந்த அதிகமான பிரகாசத்துடன் உள்ள High beam வசதியை இருவழி சாலை உள்ள நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவது நல்லது. மேலும் வாகனத்தில் வேகமாக பயணிக்கும் போது ஓட்டுநருக்கு சாலை மீது தெளிவான பார்வை கிடைக்க High beam வசதியைப் பயன்படுத்துவது சிறந்தது.

இரவு நேரங்களில் மலைப்பிரதேசங்களில் பயணிக்கும் போது தெளிவான பார்வை கிடைக்க High beam வசதியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

ஆனால் நெருக்கமான நகர சாலைகளில் அதிக பிரகாசத்துடன் High Beam-ல் செல்லும்போது, எதிரில் வரும் ஓட்டுநருக்கு அதிக பிரகாசத்தால் ஒரு சில நொடிகள் பார்வை குறைபாடு ஏற்படும். எனவே நெருக்கமான நகர்ப்புற சாலைகளில் செல்லும்போது High beam வசதியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் இந்த high beam வசதியில் அதிக பிரகாசம் தேவைப்படுவதால், அதிக மின்சாரம், வாகன பேட்டரியிலிருந்து தேவைப்படுமகிறது.

மேலே சொல்லப்பட்ட சரியான சமயங்களில் Low beam மற்றும் High beam வசதியை வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்துவது சிறந்தது.