கார் மற்றும் கனரக வாகனங்களில் டயரின் அளவை எப்படி கண்டுபிடிப்பது ?

கார்களில் உள்ள சக்கரங்கள், வாகனத்தின் எடையை சுமக்கவும்  மற்றும் சுழற்சி உதவியுடன் வாகனத்தை நகர்த்தவும் பயன்படுகிறது. மேலும் கனரக வாகனங்களில் 6, 10, 14 எண்ணிக்கையிலான டயர்களை அதிக எடை சுமக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த கார் மற்றும் கனரக வாகனங்களில் பழைய டயருக்கு பதிலாக புதிய டயரை மாற்றும் போது டயரையின் அளவை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த டயரின் அளவை வாகன தயாரிப்பாளர்கள் 215/75-R15 என்ற குறியீட்டு மொழியில் சக்கரத்தின் பக்கவாட்டில் எழுதியிருப்பார்கள். இந்தக் குறியீடு உதாரணத்திற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு காருக்கும் மற்றும் கனரக வாகனத்திற்கும் இந்த குறியீடு மாறுபடும்.

உதாரணமாக Maruti Swift காரின் டயருக்கு ஒரு குறியீடும், Tata Sumo காரின் டயருக்கு ஒரு குறியீடும் இருக்கும். எனவே இந்த குறியீடு உதவியுடன்  டயரின் அளவை எப்படி கண்டுபிடிப்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வாகன சக்கரங்கள்

வாகன சக்கரத்தில் ரப்பரினால் உருவாக்கப்பட்ட பாடியுடன், காற்று நிரப்பப்பட்ட tube மற்றும் உலோகத்தால் ஆன Rim இணைக்கப்பட்டிருக்கும். இந்த சக்கர அமைப்பு, பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின்களில் இருந்து கிடைக்கும் சக்தி மற்றும் சுழற்சி உதவியுடன் சுழல்கிறது.

இந்த சுழற்சி, சாலையுடன் உராய்வை ஏற்படுத்திக் கொண்டு வாகனத்தை நகர்த்துகிறது. இந்த நகர்த்துதலே நாம் பயணத்தை மேற்கொள்ளவும், பொருட்களை சுமந்து செல்லவும் பயன்படுகிறது.

இந்த ரப்பரினால் ஆன சக்கர அமைப்பு, நெகிழ்வு தன்மையுடன் வாகனத்தின் எடையைத் தாங்கிக் கொள்ளவும் உதவுகிறது.

எனவே முக்கிய பங்காற்றும் இந்த சக்கரத்தை புதிதாக மாற்றும்போது சக்கரத்தின் அளவை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் வாகனத்தின் எடை மற்றும் எஞ்சினின் சக்தியை பொறுத்து, சக்கரத்தின் அளவு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

எனவே அதே சக்கர அளவை வாகனத்தில் பொருத்த, வாகன தயாரிப்பாளர்கள் கொடுக்கப்பட்ட சக்கரத்தின் அளவைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் சக்கரத்தின் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும் குறியீடு மூலம் சக்கரத்தின் அளவை எளிமையாக கணிக்கலாம். இதைப் பற்றிக் கீழே காணலாம்.

சக்கர குறியீடு

முதலில் வாகன சக்கரத்தின் பக்கவாட்டில் xxx / xx – Rxx என்ற குறியீட்டில் எழுதப்பட்டிருப்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதில் x என்பது எண்கள் ஆகும். உதாரணத்திற்கு 215/75-R15 அல்லது 285/75-R16 என்ற குறியீட்டில் எழுதப்பட்டிருக்கும். இப்பொழுது நாம் 215/75-R15 குறியீடை எடுத்துக்கொண்டு சக்கரத்தின் அளவை கணக்கிடலாம்.

இதில் R15 என்பது உலோகத்தாலான Rim-ன் விட்டம் 15 inch ஆகும். இதனை mm-ல் மாற்ற 25.4-வுடன் பெருக்க வேண்டும். இப்போது Rim-ன் விட்டம் 15 x 25.4 = 381 mm.

இதில் 215 என்பது டயரின் அகலம் 215 mm ஆகும். அதாவது தரையுடன் பிடிப்பை ஏற்படுத்தும் பகுதியின் அளவு ஆகும். 

இதில் 75 என கொடுத்திருப்பது டயரின் பக்கவாட்டு அளவை அளக்க உதவுகிறது. அதாவது ஒரு பக்கவாட்டின் டயரின் அளவு 215 எண்ணில் 75 சதவீதம் ஆகும். மற்றொரு பக்கவாட்டு டயரின் அளவு 215 எண்ணில் 75 சதவீதம் ஆகும். இதை தெளிவாக கீழே உள்ள படத்தில் காணலாம்.

மேலும் டயரின் விட்டத்தை கண்டுபிடிக்க, டயரின் ஒரு பக்கவாட்டு அளவு, Rim-ன் விட்டம், டயரின் மற்றொரு பக்கவாட்டு அளவு என மூன்றையும் கூட்ட வேண்டும்.

டயரின் விட்டம் = டயரின் ஒரு பக்கவாட்டு அளவு + Rim-ன் விட்டம் + டயரின் மற்றொரு பக்கவாட்டு அளவு

டயரின் விட்டம் =  (0.75×215) + (15×25.4) + (0.75×215)

டயரின் விட்டம் =  703.4 mm

இதில் டயரின் விட்டம், டயரின் பக்கவாட்டு அளவு, Rim-ன் விட்டம், டயரின் அகலம் போன்ற அளவுகளை ஒரு சிறிய குறியீடு மூலம் எளிமையாக வாகன தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இப்பொழுது உங்களுக்கு வாகன டயரின் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும் குறியீடு உதவியுடன் புதிய டயர்களை வாங்கவும் மற்றும் டயரின் அளவுகளை கணக்கிடவும் தெரிந்திருக்கும்.