பெரிய வாகனங்களில் கிளட்ச் புகைய காரணம் என்ன ?

பெரிய கனரக வாகனங்களில் கிளட்ச் Plate கருகி விட்டது அல்லது புகைந்து விட்டது என கேள்வி பட்டிருப்போம். இது கனரக வாகன ஓட்டுநர்களுக்கும், ஆட்டோமொபைல் துறையில் இருப்பவர்களுக்கும் மிகவும் பரிச்சயமான விஷயம்.

கியர் உள்ள இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கண்டிப்பாக கிளட்ச் Plate இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் இருந்து, வாகனத்தின் சக்கரத்திற்கு பவரை பரிமாற்ற பயன்படும் கிளட்ச் Plate கருகுவதற்கான காரணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதற்கு முன்பு கிளட்ச் Plate எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் காணலாம்.

கிளட்ச் Plate செயல்படும் விதம்

பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலிருந்து கிடைக்கும் சக்தியை, சக்கரத்திற்கு பரிமாற்ற Flywheel, Clutch, Gear box ஆகிய அமைப்புகள் உதவுகிறது. இதிலுள்ள கிளட்ச் அமைப்பு flywheel-வுடன் இணைந்து சக்தியை பரிமாற்ற முக்கிய பங்காற்றுகிறது.

இந்த கிளட்ச் அமைப்பில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒரு பகுதி, அழுத்தும் தட்டு உள்ள பகுதி. மற்றொரு பகுதி flywheel-வுடன் இணையும் தகடு உள்ள பகுதி.

அழுத்தும் தட்டு உள்ள பகுதியில் வட்ட வடிவ தட்டுடன் spring அமைப்பு உள்ளது. flywheel-வுடன் இணையும் பகுதியில் Fiber மற்றும் ரெசின் மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்ட தகடு உள்ளது.

இந்தத் ரெசின் தட்டு, flywheel-வுடன் இணைய வட்ட வடிவ அழுத்தும் தட்டு, spring உதவியுடன் தேவையான அழுத்தத்தை கொடுக்கிறது. இந்த சமயத்தில்தான் flywheel-வுடன் ரெசின் தகடு இணையும்போது பவரானது ரெசின் தகடுக்கு வருகிறது. இப்போது தகடுடன் இணைக்கப்பட கம்பி வழியாக பவரானது Gear box-க்கு செல்கிறது.

இதுவே வட்டவடிவ அழுத்தும் தட்டு, spring உதவியுடன் அழுத்தத்தை விலக்கிக் கொள்ளும் போது ரெசின் தகடு, flywheel-ல் இருந்து விலகுகிறது. இந்து சமயத்தில் பவரானது துண்டிக்கப்படுகிறது.

இவ்வாறு நாம் கிளட்ச் pedal-ஐ காலால் அழுத்தும் போதும் அல்லது காலை விலக்கிக் கொள்ளும் போதும் பவரானது தடுக்கப்படுகிறது அல்லது பரிமாறப்படுகிறது.

கிளட்ச் புகைய காரணம்

இந்த அமைப்பில், அழுத்தும் தட்டு உள்ள பகுதியில் உள்ள spring தான் ரெசின் தகடு, flywheel-வுடன் இணைய தேவையான அளவு அழுத்தத்தைத் தருகிறது. 

இந்த spring அழுத்தத்தை வாகனத்தின் எஞ்சின் பவர், வாகன எடை மற்றும் வாகனம் சுமக்கும் அதிகபட்ச எடையை பொறுத்து எஞ்சினியர்கள் வடிவமைப்பார்கள். இந்த தகவலை வாகன கையேட்டிலும் மற்றும் கனரக வாகனங்களின் பக்கவாட்டு பாடியிலும் வாகன தயாரிப்பாளர்கள் எழுதியிருப்பார்கள்.

எனவே இந்த வாகனம் சுமக்கக்கூடிய அளவை காட்டிலும் அதிகமான எடையை சுமந்து செல்லும் போது, கிளட்ச் அமைப்பில் உள்ள அழுத்தும் பகுதியில் உள்ள spring ஆனது தேவையான அழுத்தத்தை கொடுக்க முடிவதில்லை.

இதனால் ரெசின் தகடு, flywheel-வுடன்  இணைய முடியாமல் தடுமாறுகிறது. மேலும் flywheel-ன் சுழற்சி காரணமாக ரெசின் தகடு உராய்வை ஏற்படுத்துகிறது.

இந்த உராய்வினால் அதிகப்படியான வெப்பம் உருவாகிறது. எனவே resin மூலக்கூறால் ஆன தகடு எளிதில் கருக தொடங்குகிறது. 

இந்த அதிகப்படியான எடையே கிளட்ச் தகடு கருக காரணம்.

மலையேற்றம்

மலையேற்றம் அல்லது மேடான ஏற்றத்தில் வாகனம் எடையுடன் செல்லும்போது கிளட்ச் தகடு கருக அதிக வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அறிவியல் விதிப்படி, மேடான பகுதியில் ஏற்றத்தின் கோணம் (angle) அதிகரிக்க அதிகரிக்க வாகனத்தின் எடை மற்றும் சுமக்கும் எடை அதிகரிக்கும்.

இந்த எடை அதிகரிப்பு, கிளட்ச் தகடு கருக காரணமாய் அமைகிறது. அதுவே சாதாரண சமதள ரோட்டில் ஏற்றத்தின் கோணம் பூஜ்ஜியமாக இருப்பதால் கிளட்ச் செயல்பாடு நன்றாக இருக்கிறது.

இப்பொழுது உங்களுக்கு அதிகப்படியான கனரக எடை மற்றும் மலையேற்றம், கிளட்ச் தகடு புகைய அல்லது கருக காரணம் என புரிந்து இருக்கும்.