வாகன என்ஜின்களில் ஏற்படும் அதிர்வுகளை கிளட்ச் குறைக்குமா? தடுக்குமா?

கியர் உள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கண்டிப்பாக கிளட்ச் (clutch)  இருக்கும். இந்த கிளட்ச், எஞ்சினில் இருந்து கிடைக்கும் பவரை கம்பி வழியாக gear box-க்கு கடத்தவும் மற்றும் தடுக்கவும் உதவுகிறது.

இவ்வாறு கிளட்ச் செயல்படும்போது, எஞ்சினில் இருந்து உருவாகும் அதிர்வுகளையும் gear box-க்கு கடத்துகிறதா அல்லது தடுக்கிறதா என்பதை கீழே உள்ள பதிவில் காணலாம்.

கிளட்ச் அமைப்பு

பொதுவாக இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் இன்ஜினையும், நான்கு சக்கர வாகனங்கள் பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜினை கொண்டிருக்கும். இந்த இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தியை Flywheel, Clutch, Gear box போன்ற அமைப்புகள் சக்கரத்திற்கு கடத்த உதவுகிறது.

இதில் Flywheel ஆனது எஞ்சினில் இருந்து கிடைக்கும் நிலை தன்மையற்ற சக்தியை, நிலையான சக்தியாக மாற்றுகிறது. அடுத்ததாக உள்ள கிளட்ச் சக்தி தேவைப்படும் போது இணைப்பை ஏற்படுத்தி சக்தியை பரிமாற்றவும், சக்தி தேவை இல்லாதபோது இணைப்பை துண்டித்து பரிமாற்றத்தை தடுக்க உதவுகிறது.

அதன்பின்பு உள்ள Gear box, சக்தியை கியர் விகிதத்திற்கு ஏற்ப மாற்றி சக்கரத்திற்கு கொடுக்கிறது. இந்த சக்தியுடன் தேவையில்லாத அதிர்வுகளும் சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது. இந்த அதிர்வுகள் எவ்வாறு உருவாகிறது என்று கீழே காணலாம்

அதிர்வுகள்

தற்போது உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் பவரை உருவாக்க நான்கு நிலைகள் (stages) உதவுகிறது. இதில் காற்று மற்றும் எரிபொருள் உள்ளிழுப்பு, அழுத்தம், வெடிப்பு மற்றும் வெளியேற்றம் என நான்கு நிலைகள் உள்ளது.

இதில் வெடிப்பு நிலையில் மட்டும்தான் அதிக சக்தி கிடைக்கிறது. மற்ற மூன்று நிலைகளிலும் சக்தி கிடைக்காது. இந்த சீரற்ற அதிக சக்தி, அதிக உதிரிபாகம் உள்ள எஞ்சினில் அதிகப்படியான அதிர்வுகளை உருவாக்குகிறது. இந்த அதிக சக்தியும் அதிர்வும் அப்படியே Flywheel-க்கு செல்கிறது.

இந்த சீரற்ற அதிக சக்தியானது, சீரான சக்தியாக மாற Flywheel உதவுகிறது. இந்த சீரான சக்தியுடன் அதிர்வும் சேர்ந்து கிளட்ச் அமைப்பிற்கு செல்கிறது.

இந்த கிளட்ச் அமைப்பு இரு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி, அழுத்தும் தட்டு உள்ள பகுதி. இரண்டாவது பகுதி, சக்தியை கடத்த உதவும் தகடு உள்ள பகுதி.

இந்த அழுத்தும் தட்டு உள்ள பகுதி, தகடு பகுதியை  Flywheel-வுடன் இணைக்கும்போது சக்தி மற்றும் அதிர்வு, தகடு பகுதிக்கு வருகிறது. 

வடிகட்டுதல்

இப்போது சக்தி மற்றும் அதிர்வுகள் உள்ள தகடு பகுதியில் தான், உராய்வு தகடுகள், ஸ்பிரிங் அமைப்பு உள்ளது. இந்த உராய்வு தகடுகள், ஸ்பிரிங் போன்ற அமைப்பு சக்தியை அப்படியே வைத்துக்கொண்டு, அதிகப்படியான அதிர்வை வடிகட்டி மிகவும் குறைவான அதிர்வாக மாற்றுகிறது.

இப்பொழுது சக்தி மற்றும் குறைக்கப்பட்ட அதிர்வுகள், தகடுடன் இணைக்கப்பட்ட கம்பி மூலம் Gear box-க்கு செல்கிறது. இங்கு சக்தியானது கியர் விகிதத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு, வாகன சக்கரத்திற்கு தரப்படுகிறது.

இவ்வாறாக அதிக அதிர்வுகள் வடிகட்டப் படுவதால், வாகனத்தில் அதிர்வுகள் குறைக்கப்படுகிறது.

இந்த குறைக்கப்பட்ட அதிர்வு, வாகனத்தில் நீண்டதூரம் பயணிப்பவர்களுக்கு comfort-ஐ தருகிறது. மேலும் Gear box சேதம் அடைவதும் தடுக்கப்படுகிறது.

பொதுவாக இஞ்சினின் ஆரம்ப இயக்கத்தின் போதும், குறைவான என்ஜின் shaft சுழற்சியின் போது அதிக அதிர்வுகள் இருக்கும். மேலும் 1st gear, 2nd gear-ல் இயக்கும் போது அதிக அதிர்வுகள் இருக்கும். இந்த அதிகப்படியான அதிர்வுகளை வடிகட்டும் வகையில், தற்போதைய என்ஜினியர்களால் கிளட்ச் அமைப்பு வடிவமைக்கப்படுகிறது.

இதனால் பைக் மற்றும் கார்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதிர்வுகள் இல்லாத சிறந்த பயண அனுபவத்தை பெற கிளட்ச் அமைப்பு உதவுகிறது.

இந்த பதிவில் இருந்து வாகன என்ஜினில் ஏற்படும் அதிர்வுகளை கிளட்ச் குறைக்கிறது என உங்களுக்கு புரிந்திருக்கும்.