வாகனங்களில் Wet Clutch அல்லது Dry clutch வசதி எப்போது தேவைப்படுகிறது தெரியுமா ?

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மோட்டார் பைக் மற்றும் கார்களில் கியர் மாற்றுவதற்கு கண்டிப்பாக கிளட்ச் அமைப்பை பயன்படுத்துவோம். இந்த அமைப்பில் Wet Clutch மற்றும் Dry clutch என இரண்டு வசதிகள் உள்ளது.

எனவே இந்த Wet Clutch மற்றும் Dry clutch வசதி எங்கு பயன்படுகிறது என்பதை பற்றிய விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

கிளட்ச் அமைப்பு

இந்த கிளட்ச் அமைப்பு, வாகனத்தின் எஞ்சின் அருகில் உள்ள flywheel-க்கும், Gear box-க்கும்  நடுவில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கிளட்ச் அமைப்பு, flywheel-லிருந்து Gear box-க்கு பவரை தேவைப்படும்போது பரிமாற்றவும், தேவையில்லாத போது பரிமாற்றத்தை தடுக்கவும் உதவுகிறது.

மேலும் வாகன இன்ஜின்களில், சக்தி மற்றும் சுழற்சியுடன், அதிக அதிர்வுகளும் உருவாகிறது. இந்த சக்தி, சுழற்சி மற்றும் அதிக அதிர்வுகள்,  flywheel வழியாக கிளட்ச் அமைப்பிற்கு செல்கிறது.

இந்த கிளட்ச் அமைப்பில் தேவையில்லாத அதிக அதிர்வுகள் வடிகட்டப்பட்டு தேவையான சக்தி மற்றும் சுழற்சியானது, gear box வழியாக சக்கரத்திற்கு செல்கிறது. இவ்வாறு கிளட்ச் அமைப்பு, சக்தியை பரிமாற்றமும், அதிக அதிர்வுகளை வடிகட்டவும் பயன்படுகிறது.

இந்த கிளட்ச் அமைப்பில் Dry Clutch, Wet Clutch என இரண்டு வசதிகள் உள்ளன. முதலில் Dry Clutch வசதி எங்கு தேவைப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

Dry Clutch

பொதுவாக கிளட்ச் அமைப்பில், அழுத்தும் தட்டு பகுதி மற்றும் flywheel-வுடன் இணையும் தகடு பகுதி என இரண்டு பகுதிகள் உள்ளன. இந்த அழுத்தும் தட்டு பகுதி, தகடு பகுதியை அழுத்தி flywheel-வுடன் இணைக்கிறது.

இதில் ஏற்கனவே flywheel சுழற்சியுடன் இருப்பதால், தகடு பகுதி இணையும் போது சிறிது உராய்வு ஏற்பட்டு வெப்பம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவதால் அதிக வெப்பம் கிளட்ச் அமைப்பில் உருவாகிறது. இந்த வெப்பத்தை குறைக்க, போதுமான காற்று வசதி மற்றும் சிறிது இடவசதி தேவை.

கார் போன்ற பெரிய வாகனங்களின் முன்பகுதியில் உள்ள bonnet-ல் போதுமான காற்று வசதி, இடவசதி இருப்பதால் இந்த கிளட்ச் அமைப்பில் உருவாகும் வெப்பத்தை குறைக்க, வேறு எந்த குளிர்விப்பானும் தேவைப்படுவதில்லை.

மேலும் கார் bonnet-ல் இருக்கும் அதிக இடவசதியால், அதிக சக்தியை பரிமாற்ற தேவைப்படும் கிளட்ச் அமைப்பை என்ஜினியர்கள் எளிதாக வடிவமைக்கிறார்கள்.

இவ்வாறு கிளட்ச் அமைப்பில் உருவாகும் வெப்பத்தை குறைக்க, அதிக இடவசதியும், காற்று வசதியும், உதவுவதால் இந்த கிளட்ச் அமைப்பிற்கு Dry clutch என அழைக்கப்படுகிறது.

இவ்வாறு அதிக இடவசதி உள்ள கார் போன்ற வாகனங்களில், அதிக சக்தியை பரிமாற்ற, காற்றினால் குளிர்விக்கப்படும் Dry clutch பயன்படுகிறது.

Wet Clutch

ஆனால் பைக் போன்ற சிறிய வாகனங்களில் இட வசதி குறைவு. எனவே கிளட்ச் அமைப்பில் உருவாகும் வெப்பத்தை குறைக்க, எஞ்சின் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இங்கு இடவசதி குறைவாக இருப்பதால், குறைந்த சக்தியை பரிமாற்றும் வகையிலே சிறியதாக கிளட்ச் அமைப்பு வடிவமைக்கப்படுகிறது.

இங்கு கிளட்ச் அமைப்பில் உருவாகும் வெப்பம் முழுவதும் எஞ்சின் ஆயில் உதவியுடன் குளிர்விக்க படுவதால், Wet Clutch என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு குறைந்த இடவசதி உள்ள பைக் போன்ற இரு சக்கர வாகனங்களில் குறைந்த சக்தியை பரிமாற்ற, எஞ்சின் ஆயில் உதவியுடன் குளிர்விக்கப்படும் Wet Clutch பயன்படுகிறது.

எனவே கார் போன்ற வாகனங்களில் அதிக இடவசதி இருப்பதால், அதிக சக்தியை பரிமாற்ற, Dry clutch அமைப்பும், பைக் போன்ற வாகனங்களில் குறைவான இடவசதி இருப்பதால், குறைந்த சக்தியை பரிமாற்ற Wet clutch அமைப்பும் பயன்படுகிறது என இந்த பதிவில் இருந்து உங்களுக்கு புரிந்திருக்கும்.

மேலும் அதிக இடவசதி இருப்பதால் வெப்பத்தை குறைக்க, Dry clutch அமைப்பில் காற்று வசதியும், குறைந்த இடவசதி இருப்பதால் வெப்பத்தை குறைக்க Wet clutch அமைப்பில், எஞ்சின் ஆயில் அமைப்பும் பயன்படுகிறது.