அரிதான இளஞ்சிவப்பு நிற வைரம் – ஏலம் இத்தனை கோடியா?

கடந்த 2017 வருடம், ஜூலை மாதம் ரஷ்ய நாட்டில் அல்ரோஸா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் “இயற்கையின் உண்மையான அதிசயம்”  என்று பெயரிடப்பட்டது. 14.83 கேரட் எடையுள்ள இந்த வைரம், இதுநாள் வரை கண்டறியப்பட்ட இளஞ்சிவப்பு நிற வைரங்களில் மிகப் பெரியது ஆகும்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஏல விற்பனையில் ஆரம்ப விலையாக இந்திய மதிப்பில் 119 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 198 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இந்த ஏல விற்பனையை வழிநடத்திய நகை நிபுணர் பெனாய்ட் ரெபெலின் கூறுகையில், “ ஏலத்தில் விற்கப்பட்ட இந்த தரம் மிகுந்த தெளிவான இந்த வைரம், இளஞ்சிவப்பு நிற வைர விற்பனையில் சாதனை படைத்து உள்ளது.” என்றார்.

இந்த அரிதான இளஞ்சிவப்பு வைரம், ஏல விற்பனைக்கு முன்பு சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தாய்பெய் நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டது.

சமீப ஆண்டுகளாக மிகப் பெரிய செல்வந்தர்களால் சொத்து மதிப்பாக சேகரிக்கப்படும் வண்ண மயமான ஆபரண கற்களின் பட்டியலில், இந்த உயர்தர அரிதான இளஞ்சிவப்பு நிற வைரங்கள் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கையாகவே வெள்ளை நிற ஒளியை வெளிப்படுத்தும் வைரங்களின் அணு உள்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே இந்த இளஞ்சிவப்பு நிறத்தை வெளிப்படுத்துவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.